Wednesday, November 6, 2024

விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (5.11.2024) நேற்றிரவு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது.

பள்ளி தகவல் தொகுப்பு மேலாண்மை அமைப்பின் (எமிஸ்) மூலமாக பெறப்பட்ட தகவல்களில், மாணவ, மாணவிகளின் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஐ.ஐ.டி, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வரும் இப்பள்ளியில் மொத்தம் 287 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். உண்டு உறைவிட வசதியுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 181 மாணவ, மாணவியர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயின்று வருகின்றார்கள்.

இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்-அமைச்சர், வருகை பதிவேட்டினை பார்வையிட்டு தங்கியுள்ள மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தார். மேலும் விடுதியின், சமையற்கூடம், மாணவ, மாணவியர்கள் தங்குமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடி கற்றல் திறன் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில அகராதி (English Dictionary) மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி, நாட்டின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறும் வகையில் நன்கு கல்வி பயில வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் துணை முதல்-அமைச்சர், விடுதியில் குடிநீர் வசதி, சமையலறை, கழிப்பிட வசதிகளையும், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. அமைப்பின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் விவரங்கள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டாக்டர் ரா.லட்சுமணன்(விழுப்புரம்), அன்னியூர் அ.சிவா(விக்கிரவாண்டி), சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் சி.பழனி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சுருதஞ் ஜெய் நாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024