Tuesday, September 24, 2024

விவசாயிகள் நலனுக்காக ரூ. 14,000 கோடியில் 7 புதிய திட்டங்கள்!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று(செப். 2) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கவும், மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இன்று 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வேளாண் திட்டம்(டிஏஎம்)

அந்த வகையில், டிஏஎம் எனப்படும் டிஜிட்டல் வேளாண் திட்டத்துக்காக மட்டும் ரூ. 2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

டிஏஎம் திட்டத்தின் முக்கிய அம்சமாக, வேளாண் ஆவணங்கள், கிராமப்புற நிலங்களுக்கான வரைபட ஆவணங்கள், பயிர் விளைவித்திருப்பது குறித்த ஆவணங்கள் ஆகியவற்றை பராமரித்தல் ஆகியவை இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தரவுத்தளமாக ‘அக்ரி ஸ்டாக்(வேளாண் தொகுதி)’ செயல்படும். விவசாயிகள் விவரங்கள், நிலம் பயன்பாட்டு விவரங்கள், பயிர் விளைவித்திருப்பது குறித்த விவரங்கள் வேளாண் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டிஏஎம் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக விவசாயிகள் ஆதரவு அமைப்பு உள்ளது. வறட்சி மற்றும் வெள்ளம் குறித்து கண்காணித்தல், பருவநிலை மற்றும் செயற்கைக்கோள் தரவுகள், நிலத்தடிநீர் விவரங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க மேற்கண்ட அமைப்பு வழிவகை செய்கிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த ரூ. 3,979 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு பயன்படும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

வேளாண் துறைசார் கல்வி மற்றும் மேலாண்மைக்காக ரூ. 2,291 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனப்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். தேசியக் கல்வி கொள்கை 2020இன் கீழ், இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை சுகாதாரம், தோட்டக்கலைத் துறை மேம்பாட்டுக்காக முறையே ரூ. 1,702 கோடி மற்றும் ரூ. 860 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. க்ரிஷி விக்யான் கேந்திராவை வலுப்படுத்துவதற்காக ரூ. 1,202 கோடியும், தேசிய மூலப்பொருள் மேம்பாட்டுக்காக ரூ. 1,115 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024