Saturday, September 21, 2024

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,

"கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 35 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார்.

இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024