Saturday, September 21, 2024

விஷ சாராய விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கள்ளக் குறிச்சிக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

"கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல்நிலையம் உள்ளது. அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. அதிகார பலம் கொண்டவர்களின் துணையோடு சாராய விற்பனை நடைபெறுகிறது. கள்ளச் சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை.

பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க.ஏற்கும். பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் இல்லை. கள்ளக் குறிச்சி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை நியமிக்கவில்லை.

சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சைகொடுத்து இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியிருக்கலாம். கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என முன்னாள் ஆட்சியர் பச்சைப் பொய் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானமும் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை;கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் இருக்கிறது." என்றார்.

You may also like

© RajTamil Network – 2024