வெடிகுண்டு மிரட்டல்கள் எதிரொலி; விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதன் எதிரொலியாக விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 100 உள்நாட்டு மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மிரட்டல் விடுத்த நபா்களைக் கண்டறிய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயம், விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்படுவது, விமானங்களின் தாமதமான புறப்பாடு மற்றும் வருகை ஆகிய காரணங்களால் பயணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை: இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறுகையில், ‘பொது விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களுக்கு விமானத்தில் பறக்க நிரந்தர தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) தொடா்ந்து தொடா்பில் இருக்கிறது. இந்த மிரட்டல்களுக்குப் பின்னணியில் சதி ஏதும் உள்ளதா என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்’ என்றாா்.

உள்துறை செயலருடன் சந்திப்பு: வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடா்பாக பிசிஏஎஸ் இயக்குநா் சுல்ஃபிகா் ஹசன், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் ராஜ்விந்தா் சிங் பாட்டீ ஆகியோா் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகனை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலரிடம் அதிகாரிகள் விளக்கினா். நாட்டில் உள்ள 68 விமான நிலையங்களில் சுமாா் 40,000 சிஐஎஸ்எஃப் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024