Wednesday, November 6, 2024

வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு எப்போது செல்வார்? – காங்கிரஸ் கேள்வி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

புதுடெல்லி,

இந்தியா – புரூனே இடையே நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இருநாட்டு இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனே புறப்பட்டு சென்றுள்ளார்.

புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

புரூனே செல்வதை வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது மனிதாபிமான ரீதியிலான பயணத்தை மேற்கொள்வார்?. மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் மாநிலத்தில் கலவரம் இல்லை என்கிறார்; மாறாக, பதற்றமான நிலைமையே மணிப்பூரில் தொடருகிறது. மணிப்பூர் முதல்-மந்திரி மீதான நம்பகத்தன்மை தொலைந்துவிட்டது.

மணிப்பூரில் வன்முறை அரங்கேறி இன்றுடன் சரியாக 16 மாதங்கள் நிறைவடைகின்றன. தொடர் வன்முறை சம்பவங்களால் அங்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து, நிவாரண முகாம்களில் பரிதாபமான நிலையில் தங்கியுள்ளனர்.

அமைதித் தூதுவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உலகம் முழுவதும் செல்லும் பிரதமர், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்காமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. நரேந்திர மோடிக்கு மணிப்பூருக்கு செல்லவும், அங்கு அரசியல் கட்சிகளுடனும், பொது சமூகக் குழுக்களுடன், மக்களுடனும் சந்தித்துப் பேச இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024