வெள்ளோடு பறவைகள் சரணாலயப் பகுதியில் பறவைகளுக்காக பட்டாசைத் தவிர்க்கும் கிராம மக்கள்
ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பறவைகளை அச்சப்படுத்தும் வகையிலான ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்த்து, இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் 215 ஏக்கர் பரப்பில்,வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெலிகான்,கொசு உல்லான்,வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கிறது.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன் கரைவழி, செம்மாண்டாம் பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருக்கங்காடுவலசு ஆகிய கிராமங்கள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளை வெடித்தால், வெள்ளோடு சரணாலயத்திற்கு வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால், இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல், தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: பல்வேறு நாடுகளில் இருந்தும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருகின்றன. இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் தீபாவளியின் போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்தால், அச்சத்திற்குள்ளாகும்.
எனவே, வெள்ளோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்றுகூடி ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாட முடிவு எடுத்தோம். குழந்தைகள் விருப்பத்திற்காக ஒலி எழுப்பாத சிறிய வகை பட்டாசுகளை வாங்கித் தருகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது. தீபாவளி மட்டுமல்லாது, கோயில் திருவிழாக்களிலும் நாங்கள் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதில்லை என்றனர்.