Saturday, September 21, 2024

வேட்பாளர்கள் நேரடி விவாதம்.. டிரம்பின் மாற்று யோசனையை நிராகரித்த கமலா ஹாரிஸ்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் பயப்படுவதாகவும், அதனால் விவாதத்தை தவிர்க்க முயற்சிக்கிறார் என்றும் கமலா ஹாரிசின் பிரசார குழு கூறியிருக்கிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த விவாதத்தின்போது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பார்கள். இதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும்.

அவ்வகையில், ஏ.பி.சி. நியூஸ் சார்பில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி கமலா ஹாரிஸ், டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நேரடி விவாதத்தை டிரம்ப் தவிர்த்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், “செப்டம்பர் 10-ம் தேதி ஏ.பி.சி.செய்தி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் விவாதத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. அதற்கு முன்னதாக செப்டம்பர் 4-ம் தேதி பாக்ஸ் நியூஸ் சார்பில் நடைபெற உள்ள விவாதத்தில் கலந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

பாக்ஸ் நியூஸ் விவாதத்தில் கலந்து கொள்ள கமலா ஹாரிஸ் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவருடன் இனி நேரடி விவாதம் நடத்தப் போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும், டிரம்பின் இந்த மாற்று யோசனையை கமலா ஹாரிஸ் நிராகரித்துள்ளார். ஏ.பி.சி. நியூஸ் நடத்த உள்ள விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் பயப்படுவதாகவும், அதனால் விவாதத்தை தவிர்க்க முயற்சிக்கிறார் என்றும் கமலா ஹாரிசின் பிரசார குழு கூறியிருக்கிறது.

செப்டம்பர் 10-ம் தேதி நடத்த உள்ள விவாத நிகழ்ச்சியானது, இதற்கு முன்பு போட்டியில் இருந்த பைடனும், டிரம்பும் ஒப்புக்கொள்ளப்பட்டபடி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிதான். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விவாதம் செய்யத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியிருந்தனர். தற்போது செப்டம்பர் 10-ம் தேதி விவாதத்தை டிரம்ப் தவிர்த்திருப்பதை கமலா ஹாரிஸ் விமர்சனம் செய்துள்ளார்.

'எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்' என்ற நிலைப்பாடு எப்படி 'ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான இடம்' ஆக மாறியது என்பது சுவாரஸ்யமானது என கமலா ஹாரிஸ் கூறினார். டிரம்ப் ஒப்புக்கொண்டது போல் நான் செப்டம்பர் 10-ம் தேதி அங்கு இருப்பேன், நான் அவரை அங்கே சந்திப்பேன் என நம்புகிறேன் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi

You may also like

© RajTamil Network – 2024