வேதகிரி சண்முகசுந்தரம் 99-வது பிறந்தநாள் விழா | ஏற்றத் தாழ்வு நீங்க அனைவருக்கும் உயர்கல்வி: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

வேதகிரி சண்முகசுந்தரம் 99-வது பிறந்தநாள் விழா | ஏற்றத் தாழ்வு நீங்க அனைவருக்கும் உயர்கல்வி: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

சென்னை: சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு நீங்குவதற்கு, அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1942 முதல் சமூக சிந்தனையுடன் கல்வி சேவையாற்றி வரும் பொருளாதார நிபுணர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 99-வது பிறந்தநாள் விழா, தமிழியக்கம் சார்பில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தமிழியக்க நிறுவனர் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:

பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான வேதகிரி சண்முகசுந்தரம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். அவரது மனைவி யசோதா, சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வராகவும், பின்னர் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.

நாடு சமதர்ம சமுதாயத்தை நோக்கி செல்லவில்லை. இதற்கு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வேகாரணம். இந்த நிலை மாற, எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசம் கொடுக்க முடியும். மக்களின் வருவாய் அதிகரித்து, ‘எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்’ என்று மக்களே சொல்லும் நிலை உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வேதகிரி சண்முகசுந்தரம் ஏற்புரை நிகழ்த்தினார். அவரது மனைவி யசோதா நெகிழ்ச்சி உரையாற்றினார். வேல்ஸ் பல்கலைக்கழக இணைவேந்தர் ஆ.ஜோதிமுருகன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அ.மு.சுவாமிநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, எத்திராஜ் கல்லூரி நிர்வாக அறக்கட்டளை தலைவர் வி.எம்.முரளிதரன், தமிழியக்கம் துணை தலைவர் ஜெ.மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார். நிறைவாக, அதன் எழுத்தாளர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் தி.தாயுமானவன் நன்றி கூறினார்.

Related posts

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!

சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே… சிவாங்கி வர்மா!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்