Sunday, October 27, 2024

வேலை ஏதும் இல்லாதவர் எடப்பாடி: முதல்வர் விமர்சனம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் நாள்தோறும் தனது முகம் வரவேண்டும் என்பதற்காக, அரசை குறை சொல்லி எதையாவது உளறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவறுக்கு வேலை இல்லாததால் இதை தொடர்ந்து செய்கிறார் போலும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(அக். 24) சென்னை, அண்ணா அறிவாலயம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் முதல்வரிடம் மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மழை தொடர்ந்து பெய்யவில்லை. வெள்ளிக்கிழமைதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்னையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என பதிலளித்தார்.

வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? கோயம்புத்தூரிலும் பெய்து கொண்டிருக்கிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,அப்படி ஒன்றும் இல்லை. தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க |மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

சென்னையில் மழை பெய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம் என்றார்.

மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில், அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மத்திய அமைச்சருடன் இன்று நடைபெற்ற ஆய்வு குறித்த கேள்விக்கு, ஏற்கனவே மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024