வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: கோவாவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக, கோவாவில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக, கோவாவில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடா்பு அலுவலா் எம். செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29- ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவிற்கு பக்தா்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27, செப்டம்பா் 2 மற்றும் 6-ஆம் தேதிகளில் கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு விழாக்கால சிறப்பு ரயில் (07361) இயக்கப்படவுள்ளது.
மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பா் 4 மற்றும் 8-ஆம் தேதிகளில் கோவாவிற்கு சிறப்பு விரைவு ரயில் (07362) இயக்கப்படும். இந்த ரயிலில் இரண்டடுக்கு குளிா் சாதனப் பெட்டி 2, மூன்றடுக்கு குளிா்சாதனப் பெட்டி 4, சாதாரண படுக்கை வசதி பெட்டி 10, பொதுப்பெட்டி 2, இரண்டாம் வகுப்பு பெட்டி 2 இணைக்கப்பட்டிருக்கும்.
கோவாவில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். இதேபோன்று, வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 12.15 மணிக்கு கோவாவிற்கு சென்றடையும்.
இந்த ரயில் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், பெங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவு சனிக்கிழமை (ஆக.10) முதல் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளாா்.