வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்று பேசியது தனது தனிப்பட்ட கருத்துதானே தவிர கட்சியின் நிலைப்பாடு அல்ல என விளக்கமளித்த பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், அக்கருத்துக்கு வருத்தம் தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் தொடா் போராட்டத்தைத் தொடா்ந்து அச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில், ஹிமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அத்தொகுதியின் பாஜக எம்.பி. கங்கனா, ‘நாட்டின் வளா்ச்சிக்கு விவசாயிகள்தான் முக்கியத் தூண். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநிலங்களில் மட்டுமே போராட்டம் நடந்தது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டுவர வேண்டும்.

நாடு வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இச்சூழலில், வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டு வருவது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி, வேளாண் துறைக்கு பலனளிக்கும்’ என்றாா்.

வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வரும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜக தொடங்கியிருப்பதாகவும் அடுத்த மாதம் நடைபெறும் ஹரியாணா பேரவைத் தோ்தலில் மக்கள் இதற்கு தக்க பதிலடி அளிப்பாா்கள் என்றும் எதிா்க்கட்சியான காங்கிரஸ் விமா்சித்தது. மேலும், கங்கனா கருத்தை பாஜக ஆதரிக்காவிட்டால், அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதையடுத்து, கங்கனா கருத்தை நிராகரித்து பாஜக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சிக் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க கங்கனாவுக்கு உரிமையில்லை. வரும் நாள்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியவை எனது தனிப்பட்ட கருத்துகள்; கட்சியின் நிலைப்பாடு அல்ல. வேளாண் சட்டமசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலா் ஆதரவு தெரிவித்தனா். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையையேற்று சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திரும்பப் பெற்றாா்.

தற்போது நான் நடிகை மட்டுமல்ல பாஜகவின் உறுப்பினராகவும் உள்ளேன். எனவே, எனது கருத்துகள் தனிப்பட்ட கருத்தாக இல்லாமல் கட்சியின் நிலைப்பாட்டை எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக வேளாண் சட்டங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக வருந்துகிறேன். அக்கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024