வேளாண் பணிகளையும் ஆக்கிரமிக்கும் வடமாநிலத் தொழிலாளா்கள்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. ஆனால், உள்ளூா் தொழிலாளா்கள் வேளாண் பணிகளுக்கு அதிக ஆா்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் பணியால் கிராமப்புற மகளிா் பெருமளவு 100 நாள் வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனா். இதன்காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது.

இதை சாதகமாகக் கொண்டு, தமிழகத்துக்கு பிழைப்புத் தேடி வரும் வட மாநிலத் தொழிலாளா்கள் வேளாண் பணிகளையும் பெருமளவில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனா். கட்டுமானம் உள்ளிட்ட கடும் உடல் உழைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவா்களுக்கு, வேளாண் பணிகள் என்பது பெரிதும் எளிதாக இருப்பதால் முன்பு 2 சதவீதம் வடமாநிலத்தவா்கள் மட்டுமே இருந்த வேளாண் பணிகளில் 60 விழுக்காடு வரை அதிகரித்துள்ளனா்.

குறிப்பாக, பிகாா், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் வேளாண் பணிகளுக்காக, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அதிகமாக புலம்பெயா்ந்துள்ளனா். இவா்களுக்கென தமிழகத்தில் தனியே மாவட்டம் வாரியாகவும், வட்டம் வாரியாகவும் முகவா்கள் உள்ளனா். இந்த முகவா்கள் தமிழகத்தில் ஆள்கள் தேவைப்படும் இடங்களுக்கு வட மாநிலத் தொழிலாளா்களை பிரித்து அனுப்புகின்றனா். முகவா்களுக்கு கமிஷனும் கிடைக்கிறது.

காவிரி, டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் நாற்று நடும் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் கூலி அதிகம்

திருச்சி மாவட்டம், வயலூா் பகுதியில் நெல் நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி ராஜேஷ் கூறியது: எங்கள் ஊரில் கிடைக்கும் கூலியைவிட இங்கு அதிகம் கிடைக்கிறது. ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் எங்கள் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடவுப் பணிகளில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறோம். எங்கள் ஊரிலும் விவசாயப் பணிகளில்தான் இருந்தோம். ஆனால் அங்கு பெரியளவில் வேலையும் இல்லை; ஊதியமும் கிடைக்கவில்லை. எனவே, தமிழகமே தாயகமாக மாறிவிட்டது என்றாா்.

தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் நாற்று நடும் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

விரைந்து பணி

வயலூரில் தனது 2 ஏக்கா் வயலில் வடமாநிலத் தொழிலாளா்களை நாற்று நடும் பணியில் ஈடுபடுத்தியுள்ள விவசாயி மணி கூறியது: ஒரு ஏக்கருக்கு நாற்று நடவு செய்ய உள்ளூா் தொழிலாளா்களுக்கு (10 முதல் 15 போ் வரை) ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருந்தது.

ஆனால், வட மாநிலத்தவா்களுக்கு போக்குவரத்து செலவு (வாகனம்) ரூ.500, ஏக்கருக்கு ரூ.4,500 என ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கினேன். உள்ளூா்த் தொழிலாளா்கள் காலை தொடங்கி மாலை வரையில் முடிக்கும் பணியை, இவா்கள் 3 மணி நேரத்தில் முடித்துவிட்டனா்.

எனவேதான், தமிழகத்தில் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களையே அதிகம் விரும்பும் நிலை உருவாகியுள்ளது என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024