ஹரியாணாவில் தலித் சமூகத்தினரைக் குறிவைக்கும் கட்சிகள்! ஏன்?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது.

தற்போது பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்திய தேசிய லோக் தளத்துடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன்(அக். 3) முடிவடைகிறது. இந்நிலையில் ஹரியாணாவில் தலித்துகளை முன்வைத்து கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஏனெனில், ஹரியாணாவில் உள்ள மக்கள்தொகையில் 20% பேர் தலித் சமூகத்தினர். இதனால் ஹரியாணா தேர்தல் முடிவில் தலித் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

காங்கிரஸும் ஆளும் பாஜகவும் தலித் சமூகங்களைத் தங்கள் பக்கம் இழுக்க, தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலிலும் தலித் சமூகத்தினரின் வாக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் பாஜக ஆட்சி இருந்தாலும், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தலித் சமூகத்தினரில் காங்கிரஸ் 68% வாக்குகளைப் பெற்றது. அதேசமயம் பாஜக 24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவே 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 51%, காங்கிரஸுக்கு 25% மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ந’மது’ அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தலித் சமூகத்தினரின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுரிந்தர் எஸ் ஜோத்கா கூறினார்.

'இது பாஜக மீதான மக்களின் அதிருப்தியைக் காட்டுகிறது. அரசியலமைப்பு, விவசாயச் சட்டங்கள் மற்றும் இதர பிரச்னைகளின் விளைவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று காட்டியுள்ளது' என்றார்.

இவர் இந்தியாவில் சாதிகள் குறித்த 'தற்கால இந்தியாவில் சாதிகள்' (Caste in Contemporary India) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

பகுஜன் சமாஜ் – தேசிய லோக் தளம் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி- ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி ஆகியவை களத்தில் உள்ள நிலையில், தலித் கட்சிகள் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

'சாதி என்பது மாறக்கூடியது. முதலில் தலித் என்பது சமூகத்தில் ஒரு வகை அல்ல. அதுபோல, ஹரியாணாவில் தலித் அடையாள அரசியல் என்பது இல்லை. ஒருவித மோதல் சூழ்நிலையில் இருந்துதான் இந்த தலித் அரசியல் உருவானது. அந்த மோதல் சூழ்நிலை என்பது உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினரைப் பொருத்து இருக்கும். மாநிலத்தில் சிறுபான்மையின மக்கள்தொகையில் சாமர்கள், வால்மீகி சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது' என்றார்.

இந்த குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற பாஜகவும் காங்கிரஸும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்துள்ளன.

நாட்டில் உள்ள எந்தவொரு அரசுக் கல்லூரியிலும் மருத்துவம், பொறியியல் படிக்கும் ஓபிசி/எஸ்சி மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது.

காங்கிரஸின் வாக்குறுதியில், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி கிரீமி லேயரை அதிகரிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஹரியாணாவில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தலித் பிரிவைச் சோ்ந்த ஒருவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும், இதரப் பிற்படுத்தப்பட்ட அல்லது முற்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு மற்றொரு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர முடிவு! சாத்தியமா?

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும் அக்கட்சியின் எம்.பி. குமாரி செல்ஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் சூழ்நிலையில், அது தங்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது.

எஸ்சி/எஸ்டி பிரிவை மாநிலங்கள் அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, சமூகங்களுக்கு இடையேயான பிரிவினையை அதிகப்படுத்தியுள்ளதாக தேசிய தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் அசோக் பாரதி கூறுகிறார். மேலும், அரசியல் கட்சிகள் தலித் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அவர்களின் இடஒதுக்கீட்டை நிரப்புவதில் கவனம் செலுத்தவில்லை, அரசியல் கட்சிகள் இதில் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார்.

ஹரியாணாவின் ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 'வினேஷின் போராட்டம் அவர் ஒருவருக்கானது மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொவருக்குமானது' என்றார். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வினேஷ் போகத் அரசியல் களத்தில் இருப்பதும் ஹரியாணா அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதனிடையே, ஹரியாணாவில் முக்கிய புள்ளியான தேரா சச்சா சௌதா அமைப்பின தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் பரோலில் வெளிவந்துள்ள நிலையில் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024