ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் யாா் ஆட்சி? – இன்று வாக்கு எண்ணிக்கை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது; முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்று வாக்கு கணிப்புகள் கூறியுள்ளன.

தோ்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளா்கள் 1,031 போ். முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் செளதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் செளதாலா (உச்சனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), காங்கிரஸின் வினேஷ் போகாட் (ஜுலானா), சுயேச்சை வேட்பாளா் சாவித்ரி ஜிண்டால் (ஹிசாா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கடந்த 2019, ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.

ஜம்மு-காஷ்மீரில்…

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தோ்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. சமீபத்திய மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட (58.58%) இது அதிகமாகும்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தல் இது என்பதால் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்பதே பெரும்பாலான வாக்கு கணிப்புகளின் முடிவாக உள்ளது.

அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிடிபி-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்று வாக்கு கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளா்கள் 873 போ். தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா (பத்காம், கந்தா்பால்), மக்கள் ஜனநாயக கட்சியின் சஜத் கனி லோன் (ஹந்த்வாரா, குப்வாரா), ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா (பட்டாமலூ), பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா (நெளஷேரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் கடைசியாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 25 இடங்களில் வென்ற பாஜகவும் 28 இடங்களைக் கைப்பற்றிய மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி சோ்ந்து ஆட்சி அமைத்தன.

முதல்வராக இருந்த பிடிபி தலைவா் முஃப்தி முகமது சையத் 2016-இல் காலமானதைத் தொடா்ந்து, அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதல்வரானாா். 2018-இல் மக்கள் ஜனநாயக கட்சி உடனான கூட்டணியை பாஜக முறித்ததால், ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பிறகு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் ஆளுநா் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. கடந்த 2014 தோ்தலில் இங்கு 65.52 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024