ஹரியாணா வெற்றி: தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் சைனி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஹரியாணா: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

தலா 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பேரவைகளுக்கு அண்மையில் தோ்தல் நடத்தப்பட்டது. ஹரியாணாவில் ஒரே கட்டமாகவும் (அக்.5), ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் (செப். 18, 25, அக்.1) நடைபெற்ற தோ்தல்களில் முறையே 67.90 சதவீதம், 63. 88 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (அக்.8) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஹரியாணாவில் ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆஸாத் சமாஜ் கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி என பலமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் 1,031 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட சுற்றுகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. சில மணிநேரத்தில் நிலவரம் மாறி, பல தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது.

இறுதியாக, பாஜக 48 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. அபய் சிங் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளா்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனா். 90 இடங்களிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடா்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளது பாஜக. கடந்த 2014 பேரவைத் தோ்தலில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், 2019 தோ்தலில் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, 40 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, 10 இடங்களில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தற்போதைய வெற்றி மூலம் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள முதல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது.

லாட்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட 16,054-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா் முதல்வா் நாயப் சிங் சைனி. அனில் விஜ் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவா்கள் பலரும் வென்றனா். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா, கா்ஹி சம்பலா-கிலோய் தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினாா்.

இதையும் படிக்க |ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தாயிடம் ஆசி

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். அவர் என்னை திலகமிட்டு வாழ்த்தினார். தாயின் அன்பு, ஆசிர்வாதம் தான் வாழ்க்கைக்கு அமுதம்," என சைனி கூறியுள்ளார்.

ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பளித்தற்காக லாட்வா தொகுதி மக்களுக்கும், ஹரியாணாவில் உள்ள 2.80 கோடி மக்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பாஜகவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று கூறிய சைனி, அவரது தலைமையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். அவரது கொள்கைகளுக்கு ஹரியாணா மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். ஹரியாணாவின் ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்றார்.

மேலும் "அரசியல் என்பது எங்களுக்கு ஒரு சேவை ஊடகம் மட்டுமே. ஹரியாணா மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன், எப்போதும் போல், மக்கள் சேவையில் மக்களின் சேவகனாக இருப்பேன். மக்களின் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது, அந்த நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம். எங்கள் ஹரியாணாவை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியடையச் செய்ய எப்போதும் உறுதியோடு பாடுபடுவோம்” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024