ஹாரிஸ், டிரம்ப் இருவருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள்: போப்பாண்டவர் கருத்து

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றும், குறைந்த தீங்கு விளைவிப்பவர் ஒருவரை மனசாட்சியுடன் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் குறித்து 87 வயதாகும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் துணை அதிபா் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது.

மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இந்த விவாதத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பொருளாதாரம், குடியேற்றம், காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் தங்களது காரசாரமான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

அந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் கருத்துகளுக்கே அதிகமான ஆதரவுகள் இருந்ததாக ஊடகங்கள் பரவலாகத் தெரிவித்தன. நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பிலும் ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றும், வாக்காளர்களாகிய நீங்கள் மனசாட்சியுடன் சிந்தித்து குறைந்த தீங்கு விளைவிப்பவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என போப்பாண்டவர் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போப்பாண்டவர் பிரான்ஸிஸ் விமானத்தில் செல்லும்போது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது, " தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள். ஒருவர் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு எதிரானவர். இன்னொருவர் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் கொள்கை கொண்டவர்.

இருவரின் கருத்துகளும் பயங்கரமானது, அவர்களுடைய கருத்துகளில் தீமை இருக்கிறது.

இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் பெருந்திரளாகப் போராட்டம்!

புலம்பெயர்ந்து வரும் மக்களை அனுமதிக்காமல் விரட்டுவதும், வாழவிடமால் தடுப்பதும் பாவம், ஒரு குழந்தையை தாயின் வயிற்றிலேயே அழிப்பது என்பது ஒரு படுகொலை. இவைகளைப் பற்றி நாம் தெளிவாகப் பேச வேண்டும்.

எனினும் நீங்கள் குறைந்த தீங்கு விளைவிப்பவருக்கே வாக்களிக்க வேண்டும். குறைந்த தீங்கு விளைவிப்பவர்களில் கமலா ஹாரிஸா, டொனால்ட் டிரம்ப்பா என்று (இருவரது பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை) எனக்குத் தெரியாது. எனவே, வாக்காளர்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சிப்படி சிந்தித்து குறைந்த தீங்கு விளைவிப்பவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் கூறினார்.

மேலும், அமெரிக்க கத்தோலிக்கர்கள் நிச்சயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய போப்பாண்டவர், வாக்களிக்காமல் இருப்பது அசிங்கம். அது நல்லதல்ல. எனவே நீங்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அரசியல் விஷயங்களில் வெளிப்படையாக பேசுபவர் போப் பிரான்சிஸ்

11 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் கிட்டத்தட்ட 140 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக ஆனதில் இருந்தே அரசியல் விஷயங்களில் வெளிப்படையாக பேசி வரும் போப் பிரான்சிஸ், 2016 இல் டிரம்ப் "கிறிஸ்தவரே அல்ல" என விமர்சித்தவர்.

கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வரும் போப், கருக்கலைப்புகளை மன்னிக்க அனுமதிப்பது, ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவது மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கவலை போன்ற பல்வேறு அரசியல் பிரச்னைகளில் தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024