10-வது நபர்… உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: சிறுமியை கவ்வி சென்று, கொன்ற ஓநாய்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பஹ்ரைச்,

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் சில நாட்களாக தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் சுற்றி வரும் ஓநாய் கூட்டம் ஒன்று திடீரென இரவில், ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை, வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடி விடுகிறது.

இதுவரை 8 குழந்தைகள் ஓநாய் கூட்ட தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. பெண் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால், 45 நாட்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஓநாய்களின் இருப்பிடங்களை கண்டறிவதற்காக, கேமிராவுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஓநாய் கூட்டத்தின் தாக்குதல் தொடருவது அந்த பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

ஆபரேசன் பேடியா என்ற பெயரில் ஓநாய்களை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 4 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன. 2 ஓநாய்கள் சிக்காமல் தப்பி விட்டன. அவை இடங்களை மாற்றி கொண்டே உள்ளன. இதனால், அவற்றை தேடி கண்டுபிடிப்பதே சிக்கலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.35 மணியளவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதன்படி, 3 வயது சிறுமியை ஓநாய் ஒன்று கவ்வி சென்று கொன்றுள்ளது. இதுதவிர, ஓநாய் தாக்குதலில் 2 பெண்கள் காயமடைந்து உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், அரசு நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுபற்றி மஹசி நகர சுகாதார மையத்தின் பொறுப்பாளர் கூறும்போது, ஓநாய் தாக்குதலில் 3 வயது சிறுமி உயிரிழந்து உள்ளார். 2 பெண்கள் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். தலியா கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தாயார் அழுது கொண்டே கூறும்போது, அதிகாலை 3.35 மணியளவில் என்னுடைய 6 மாத பெண் குழந்தை சத்தம் போட்டது.

எழுந்து பார்த்தபோது, என்னுடைய 3 வயது மகள் அருகே இல்லை என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். குழந்தையின் இரு கைகளையும் ஓநாய் கடித்திருந்தது. தொழிலாளர்களாக நாங்களிருவரும் வேலைக்கு சென்று, வாழ்ந்து வருகிறோம். ஓநாயை துரத்தி சென்றோம். ஆனால் அது தப்பி விட்டது என கூறியுள்ளார்.

இதனால், ஓநாய் தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 10 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 35 பேர் வரை காயமடைந்து உள்ளனர். ஓநாயை கூண்டு வைத்து பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024