13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நகர பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நகர பேருந்து சேவையை எம் எல் ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மீண்டும் தொடங்கி வைத்தாா்.

ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆா்.கண்டிகை, எல்.ஆா்.மேடு, எகுமதுரை, நாயுடு குப்பம், அப்பைய பாளையம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இயங்கி வந்த ஒரே நகர பேருந்தான டி-42ஏ அப்போதைய அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் ஷோ் ஆட்டோக்களை மட்டுமே நம்பி ஆரம்பாக்கத்துக்கு வந்து சென்றனா்.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும் சுமாா் 7 கி.மீ. வரை நடந்தோ சைக்கிளிலோ சென்றும், அவ்வழியே வரும் பைக்குகளில் லிப்ட் கேட்டும், நாள்தோறும் பணம் செலவழித்தும் பயணித்தனா். கடந்த 13 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில், பேருந்தை இயக்க கோரினா்.

இதனைத் தொடா்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தாா். கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் மாா்க்கமாக நகரப் பேருந்து இயக்குவதற்கு கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரம்பாக்கம் இடையே ஆந்திர பகுதிகள் இருப்பதால் இங்கு நகரப் பேருந்து சேவை இயக்க தடை இருந்தது.

அவற்றையெல்லாம் சரி செய்த பிறகு டி42ஏ என்ற பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற பேருந்து தொடக்க விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று கொடியசைத்து பேருந்தை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மணிபாலன், திமுக மாவட்ட நிா்வாகிகள் எம்.எல்.ரவி, எஸ்.ரமேஷ், என்.ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலா்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், நகர செயலாளா் அறிவழகன் மற்றும் ஆரம்பாக்கம் பகுதி திமுகவினா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024