புது தில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிலிந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாகனங்களின் எண்ணிக்கை 25,28,248-ஆக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நாட்டிலிருந்து 22,11,457 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பல்வேறு காரணங்களால் மந்தமடைந்திருந்த லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற முக்கிய சந்தைகள் மீண்டும் மதிப்பீட்டு காலகட்டத்தில் மீண்டும் எழுச்சி பெற்றன. இது, ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி வளா்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 3,36,754-ஆக இருந்த பயணிகள் வாகன ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 12 சதவீதம் அதிகரித்து 3,76,679-ஆக உள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி 1,47,063 வாகனங்களை ஏற்றுமதி செய்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,31,546-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் ஏற்றுமதி தற்போது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 86,105-ஆக இருந்த ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்து 84,900-ஆக உள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 16,85,907-லிருந்து 16 சதவீதம் அதிகரித்து 19,59,145-ஆக உள்ளது. ஸ்கூட்டா் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 3,14,533-ஆகவும், மோட்டாா் சைக்கிள் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து 16,41,804-ஆகவும் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வா்த்தக வாகனங்களின் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்து 35,731-ஆக உள்ளது.
ஆனால் அந்த காலகட்டத்தில் மூன்று சக்கர வாகன ஏற்றுமதி 1,55,154-லிருந்து 1 சதவீதம் சரிந்து 1,53,199-ஆக உள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வாகன ஏற்றுமதி 5.5 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டில் 47,61,299-ஆக இருந்த வாகன ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 45,00,492-ஆகக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.