Tuesday, October 22, 2024

14 மாதங்கள் கடந்துவிட்டன.. பறக்கும் ரயில் சேவை முழுமையாக தொடங்குவது எப்போது?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சென்னை: பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டு 14 மாதங்கள் கடந்துவிட்டன, எனினும், மீண்டும் ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் தெரியவரவில்லை.

வடசென்னையிலிருந்து வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமானோர், ஒரே ரயிலில் இதுவரை பயணித்து வந்த நிலையில், கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் ரத்து செய்யப்பட்டதால் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர்.

சென்னை அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளிலிருந்து வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து, ஆட்டோ ஏதேனும் ஒன்றைப் பிடித்துத்தான் செல்ல வேண்டிய மோசமான நிலையில் பயணிகள் உள்ளனர்.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியுடன் இந்த சேவை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டது.

ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, ஏழு மாதங்களில் பணி முடிந்து ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. பிறகு பணியில் தொய்வு காரணமாக அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பணி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணி நிறைவடையவில்லை. இன்னும் நீட்டித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ரயில் பயணிகளின் துயரமும் நீள்கிறது.

எழும்பூர் – கடற்கரை இடையேயான 110 மீட்டர் கடற்படைக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் இருந்த பிரச்னை தீர்வை நெருங்கி வருகிறது. மேலும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவை எட்டி வருகிறது.

திருவள்ளூர், அரக்கோணம், ஆவடியிலிருந்து வருவோர் வழக்கமாக வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் ஏறிவிட்டால் போதும். ஆனால், தற்போது, அவர்கள் சென்னை சென்டிரல் செல்லும் ரயிலில் வந்து இறங்கி, அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை காலையில் வேலை நேரத்திலும், மழைக்காலத்திலும் இது மிகவும் கடினமானதாக மாறிவிடுகிறது. பலரும் இதற்காக ஆட்டோக்களில் ஏறும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் ஒரு சில நூறுகள் செலவாவதாகவும், இருந்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக அலுவலகம் அல்லது வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024