156-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

156-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும் அதனருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிமரியாதை செலுத்தினார். அவருடன்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் மாணவ, மாணவியரின் பஜனை நிகழ்ச்சியையும், சர்வோதயா சங்கத்தினரின் ராட்டை நூல் நூற்பு நிகழ்வையும் ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் கதர் பவன்சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சென்னை அண்ணா சாலை கதர் பவன், காந்தி கிராமம், தென்காசி அமர்சேவா சங்கம் ஆகியவற்றின் ஸ்டால்களை ஆளுநர்திறந்துவைத்தார். 12 தூய்மைப்பணியாளர்கள், 7 காந்தியவாதிகளை சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதேபோல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள்
மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்., அதிமுக, கம்யூ. இதேபோல் சத்தியமூர்த்தி பவனில் காந்தியின் படத்துக்கு தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன் ஆகியோரும் அங்கு மரியாதை செலுத்தினர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் காந்தியடிகளின் படத்துக்கு கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தி படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., தவெக மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை எஸ்.எம்.கே.குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.ஹெச்.வெங்கடாசலம், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “ஒரு எளிய மனிதனால் மனித நாகரிகத்தின் சித்தாந்த போக்கையே மாற்ற முடிந்தது. காந்தியோடும் அவரது சிந்தனைகளோடும் வாழ்க்கை பயணத்தை அமைத்துள்ளேன். நேர்மையும் அன்பும் அனைவரையும் வெல்லும் என்பதை என் தந்தையைப் போலவே காந்திஜியும் எனக்கு எந்நாளும் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருப்பார்'' என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024