Thursday, September 19, 2024

18 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெறும் கண்டதேவி கோவில் தேரோட்டம்

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதையொட்டி கண்டதேவி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. அங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 9-ம் நாள் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த தேரோட்டம் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்ததால் கடந்த 2006-ம் ஆண்டிற்கு பின்னர் தேரோட்டம் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக சப்பரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடத்துவதற்கு உயர் அதிகாரிகள், கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுவாக மாலை நேரத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பை வலியுறுத்தி காலையில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுவதையொட்டி கண்டதேவி கிராமத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்டதேவி கிராமத்திற்குள் நுழையும் அனைத்து கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்டதேவி தேரோட்டத்திற்கு செல்பவர்களுக்கு உரிய அனுமதி இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுதவிர கண்டதேவியை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் போலீசார் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐ.ஜி.கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி.க்கள், 13 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 23 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 30 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 70 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பை வலியுறுத்தி வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

You may also like

© RajTamil Network – 2024