Tuesday, October 22, 2024

2 மாதங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி 2% சரிவு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து 4வது நாளாக இன்று (அக். 3) சரிவுடன் முடிந்தது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,769.19 புள்ளிகள் சரிந்து, 82,497.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 2.10% சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 546.80 புள்ளிகள் சரிந்து 25,250.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 2.12% சரிவாகும்.

சென்செக்ஸ் வீழ்ச்சி

நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம் இன்று 83,002.09 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 83,752.81 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. இதேபோன்று 82,434 புள்ளிகள் வரை மிகப்பெரிய சரிவையும் சந்தித்தது. பின்னர் சற்று உயர்ந்திருந்த நிலையில், வணிக நேர முடிவில் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497.10 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் பங்கு மட்டுமே உயர்ந்திருந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் 1.15% உயர்ந்திருந்தது. எஞ்சிய 29 நிறுவனத்தின் பங்குகள் சரிந்தே காணப்பட்டன.

இதையும் படிக்க | அதிக மாற்றமில்லாத இந்திய மின் நுகா்வு

அதிகபட்சமாக எல்&டி பங்குகள் -4.27% சரிவைக் கண்டது. இதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி -4.16%, டாடா மோட்டார்ஸ் -4.10%, ரிலையன்ஸ் -3.95%, மாருதி சுசூகி -3.94%, ஏசியன் பெயின்ட்ஸ் -3.91%, பஜாஜ் ஃபைனான்ஸ் -3.50%, பஜாஜ் ஃபின்சர்வ் -3.14%, கோட்டாக் வங்கி -3.02% சரிவுடன் இருந்தன.

நிஃப்டி 2.12% சரிவு

இதேபோன்று நிஃப்டி வணிக நேர தொடக்கத்தில் 25,452.85 புள்ளிகளுடன் தொடங்கியது. பின்னர் படிப்படியாக சரிந்து 25,230.30 புள்ளிகளாக இருந்தது. வணிக நேர முடிவில் 546.80 புள்ளிகள் சரிந்து 25,250.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஆம்பர் என்டர்பிரைசஸ், பெட்ரோநெட், ஜீபிலியண்ட், ஏஞ்சன் ஒன், ஜேபி பவர், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று எச்பிசிஎல், ஜே.எம். ஃபைனான்சியல், கோத்ரேஜ் இந்தியா, டாபர் இந்தியா, ஜிஎம்ஆர் இன்ப்ரா, போனிக்ஸ் மில்ஸ், நுவாமா வெல்த், டிஎல்எஃப், ஆயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

மெட்டல், எலக்ட்ரிக்கல், டெக்ஸ்டைல்ஸ் துறை பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன. எஞ்சிய பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய 3வது சரிவு இதுவாகும். இதுவரை இந்த ஆண்டில் 7 முறை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர் சரிவு!

You may also like

© RajTamil Network – 2024