சண்டிகார்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார்கள். அந்த கூட்டணிக்கு முந்தைய தேர்தலில் கிடைத்ததை விட எண்ணிக்கை குறைந்து வருகிறது. 'இந்தியா' கூட்டணிக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, 400 தொகுதிகள் என்பதை மறந்து விடுங்கள். அவர்களால் ஆட்சி கூட அமைக்க முடியாது. 200 தொகுதிகளை கூட தாண்ட முடியாது.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா இல்லவே இல்லை. கர்நாடகாவில் பலமாக இல்லை. மராட்டியத்தில் பலவீனமாக இருக்கிறது. மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது. பிறகு எப்படி 400 இடங்கள் பெறுவீர்கள்?. ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு எனது பதவி பறிபோகும் என்று அமித்ஷா சொல்கிறார். நான் ஏதேனும் ஒரு வேலை பார்ப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய சிறுவயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன்.
ஏறக்குறைய பிரதமர் மோடியின் வயது அளவுக்கு எனக்கு அரசியல் அனுபவம் உள்ளது. எனவே, ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அமித்ஷாதான் சொந்த வேலையை பார்க்க வேண்டி இருக்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் தேர்தல் அறிக்கையை படிக்கவே இல்லை. அவருக்கு விளக்கி சொல்வதற்காக காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஒருவரை அனுப்பிவைப்பதாக ஏற்கனவே கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.