Saturday, September 28, 2024

2009-ல் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக் கோரி அரசு மருத்துவர்கள் வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

2009-ல் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக் கோரி அரசு மருத்துவர்கள் வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: காலம் சார்ந்த ஊதியம் வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், 8 வார காலத்தில் அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவரான டாக்டர் பெருமாள் பிள்ளை மற்றும் டாக்டர்கள் ஜெயக்குமார், நளினி, பாலமுருகன், சுதாகர். ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமெனக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்காரணமாக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2009 செப்.23 அன்று அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த முடியாது எனக் கூறி கடந்த மே மாதம் தமிழக அரசு புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, ஊதிய உயர்வு வழங்க வகை செய்யும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவர்கள் சார்பில் வழக்கறிஞர் கவுதமன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 8 வார காலத்துக்குள் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024