21 நாட்கள் போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுக்கு அமெரிக்கா-நட்பு நாடுகள் அழைப்பு

நியூயார்க்:

காசா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் களமிறங்கினர். இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழைபொழிந்தது. குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய வான் தாக்குதல்களில் லெபனானில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் லெபனான்-இஸ்ரேல் இடையே முழு அளவிலான போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றன. பிராந்தியத்தில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், சமீபத்திய தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்கள் உட்பட அனைத்து தரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரப்பில் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தம் ஒரு முன்மொழிவு மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் கூறி உள்ளது. பிரதமரும் இந்த முன்மொழிவுக்கு பதிலளிக்கவில்லை.

முன்னதாக, 2006-ல் இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவு போராளிக் குழுவிற்கும் இடையே நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்திற்கான ஆதரவை இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிஜ்புல்லா மூத்த தலைவரை குறி வைத்து லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு