ஆக்ரா: சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தாயும், சகோதரர்களும் சேர்ந்து, தந்தையைக் கொன்று வீட்டு வளாகத்திலேயே புதைத்துவிட்டதாகவும், அதனை சிறுவனாக இருந்த தான் பார்த்ததாகவும் இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
காவல்துறையினர், அந்த வீட்டுக்குச் சென்று, சுமார் எட்டு அடிக்கு தோண்டிப் பார்த்ததில், அங்கு ஒரு மனித எலும்புக்கூடு இருந்துள்ளது. இது அந்த இளைஞர் சொல்வது போல அவரது தந்தை புத்தா சிங் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
செய்த வினை 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் துரத்துவதாக, அங்கிருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கொலை நடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பதுதான் ஆச்சரியம்.
வேறொன்றுமில்லை, கொலை செய்த தாய், சகோதரர்களுக்கு இடையே, காவல்நிலையத்தில் புகார் அளித்த பஞ்சாபி சிங்குக்கு ஏற்பட்ட குடும்பத் தகராறுதான், 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைச் சம்பவத்தை தோண்டிப்பார்க்கக் காரணமாகியிருக்கிறது.
காவல்துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், எலும்புக் கூடு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.
பஞ்சாபி சிங்குக்கும், அவரது மூன்று மூத்த சகோதரர்களுக்கும் சொத்துத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாய்த்தகராரில், மூத்த சகோதரர்கள், பஞ்சாபியை, அதிகம் பேசினால், 1994ஆம் ஆண்டு அப்பாவை அனுப்பி இடத்துக்கே அனுப்பி விடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அப்போதுதான், பஞ்சாபிக்கு தனது பழைய குழந்தைப் பருவ நினைவுகள் ஞாபகத்துக்கு வந்துள்ளது.
உடனடியாக காவல்நிலையம் சென்ற 39 வயதாகும் பஞ்சாபி சிங், தான் 9 வயதாக இருந்த போது, தனது தாய் ஊர்மிளா தேவி (இப்போது இவருக்கு 70 வயது), சகோதரர்கள் பிதீப், முகேஷ், மற்றொரு பணக்கார நபர் ராஜ்வீர் சிங் ஆகியோர் சேர்ந்து தனது தந்தையை கொன்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். ராஜ்வீர் எங்களது வீட்டுக்கு அடிக்கடி வருவார், இதனால் தாய்க்கும் தந்தைக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.
ஒரு நாள், பஞ்சாபியை, பக்கத்து வீட்டுக்குச் சென்று உறங்குமாறு சகோதரர் அறிவுறுத்தியதாகவும், மறுநாள் காலை வீட்டுக்கு வந்த போது, தந்தை இறந்துகிடந்ததாகவும், தாயும், சகோதரர்களும் வீட்டுக்குள்ளேயே பள்ளம் தோண்டி அவரை புதைத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இது பற்றி யாரிடம் சொன்னாலும் கொன்றுவிடுவோம் என சகோதரர்கள் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு, இவர்களுடன் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.