35 ஆண்டுகால எம்பிசி இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: “திமுகவுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை. 35 ஆண்டுகால எம்பிசி இடஒதுக்கீட்டில் பணி பெற்றோர் குறித்த விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறுகையில், “கடந்த 2 நாட்களாக வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பொய்யான செய்தி திமுக அரசால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சில தரவுகளை முன்வைத்து வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடுக்கு மேல் இட ஒதுக்கீடு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப்-4 க்கான தரவுகளை மட்டுமே வெளியிட்டிருப்பதுடன் பதவி உயர்வு மற்றும் நேரடி தேர்வையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.
குரூப்-1, குரூப் 2 வில் முக்கிய பதவிகளை ஒரு சில சமூகங்களே பெற்று வருகின்றன. அதன்படி 109 உயர் காவல் அதிகாரிகளில் ஒரு ஐஜி மட்டுமே வன்னியர். அதேபோல தமிழக அரசில் உள்ள 53 துறைகளில் 123 செயலாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதுவா சமூக நீதி?. இது சாதி பிரச்சினை கிடையாது, சமூக நீதி பிரச்சினை. அந்தவகையில் சமூக நீதிக்கு எதிரான வன்மத்துடன் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதுபோன்ற செயல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உண்மையில் சமூகநீதி மீது அக்கறை உள்ளவராக இருந்தார். ஆனால் மலிவான அரசியலை அவரது மகன் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுகவுக்கும், சமூக நீதிக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. ஏன் திமுகவில் உள்ள பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் வன்னியர் மற்றும் பட்டியலினத்தோர் தான். ஆனால் அவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சாதிவாரியாக கணக்கெடுப்பை எடுக்க முதல்வருக்கு பயம். பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வருகின்றனர். அவற்றை நீதிமன்றங்கள் தடை செய்யவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிஹாரில் 3 மாதத்திலேயே கணக்கெடுப்பை முடித்துவிட்டனர். திமுகவில் இருக்கும் வன்னியர் அமைச்சர்கள் உள்ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீடு பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் வன்னியர் மற்றும் பட்டியலினத்தோர் ஆகிய இரு சமூகம் தான் அதிகளவில் இருக்கின்றன. அதன்படி தமிழக மக்கள் தொகையில் மொத்தம் 40 விழுக்காடு இந்த சமூகத்தினர் தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (எம்பிசி) 115 சமூகம் உள்ளனர். இதில் 114 சமூகங்கள் 6.7 விழுக்காடு மக்கள் தொகை கொண்டவை. மீதமுள்ள ஒன்றான வன்னியர் சமூகத்தின் மக்கள் தொகை 14.1 விழுக்காடு.
எனவே நாங்கள் நியாயமாக எங்கள் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை தான் கேட்கிறோம். எம்பிசி இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 1989-ம் ஆண்டு முதலான 35 ஆண்டுகால தரவுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.”என்று தெரிவித்தார்.