3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை: தமிழக மதுப்பிரியர்களுக்கு மேலும் குட்நியூஸாக டாஸ்மாக் மதுபான விற்பனையகங்களில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில், நாள்தோறும் ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகும் சில்லறை விற்பனை நிலையங்களில் இரண்டு விற்பனை கவுன்டரை அமைக்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த மூத்த அதிகாரி, ஏற்கனவே சில மதுபான விற்பனையகங்களில் இரண்டு அல்லது மூன்று கவுன்டர்கள் இருந்தாலும், தீபாவளி பண்டிகைகளின் போது ஏற்படும் ​​நெரிசலைக் கையாளும் விதமாக கூடுதல் விற்பனை கவுன்டர்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ​​“தமிழகத்தில் உள்ள 4,829 மதுபான விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. அந்த விற்பனையகங்களில் 3,500 கடைகளில் நாள்தோறும் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகிறது. சில விற்பனையகங்களில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று கவுன்டர்கள் இருந்தாலும், குறிப்பாக கூடுதலாக விற்பனையாகும் நேரம் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, ​​

கூட்ட நெரிசலைக் கையாள்வது இன்னும் கடினமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு வாரத்திற்குள் கூடுதல் விற்பனை கவுன்டர்களை அமைக்க, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

மேலும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களிலும் 'கியூஆர் கோடு மூலம் விற்பனை செய்யும் முறை அமல்படுத்தபட்டுள்ளது. விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இதையும் படிக்க |கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள்

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியலை தெளிவாக வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில மேற்பார்வையாளர்கள் தங்கள் விற்பனையகங்களில் இடப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “பெரும்பாலான கடைகள் குறைந்தபட்சம் 500 சதுர அடி பரப்பளவிலே இயங்கி வருகிறது. இதற்குள்தான் மதுபானங்களும் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே போதிய இடவசதி இல்லாமல் போதிய மதுபான பாட்டில்களை சேமிக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனம் அதிக மதுபானங்களை குவித்து அதிக விற்பனை இலக்கை நிர்ணயித்து வருவதால், விற்பனையகங்களின் இடப் பற்றாக்குறை பிரச்னையை போக்காமல் மேலும் கூடுதல் கவுண்டர்களை அமைத்தால் பண்டிகை நாள்களில் வரும் நெரிசலைக் கையாளுவது பெரும் சவாலாக இருக்கும் என்றார்.

மேலும் விற்பனையகங்களில் கூடுதல் கவுண்டர்களைச் சேர்ப்பதற்கு முன், இருக்கும் இடத்தை விரிவுபடுத்தி தர வேண்டும். அப்போது தான் மதுபான விற்பனையகங்களில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என மேற்பார்வையாளர் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024