4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து: மீண்டும் எம்.பி.யாகிறாா் அஃப்சல் அன்சாரி

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து: மீண்டும் எம்.பி.யாகிறாா் அஃப்சல் அன்சாரிசமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரிக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அலகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரிக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அலகாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. இதன் மூலம் அஃப்சல் அன்சாரி மீண்டும் எம்.பி.யாகிறாா்.

கடந்த 2005-ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏவாக பதவி வகித்த கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலையுடன் தொடா்புடைய வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரிக்கு உத்தர பிரதேச மாநிலம் காஜிப்பூா் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, 2 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது. அதன்படி காஜிப்பூா் நீதிமன்ற உத்தரவால், அஃப்சல் அன்சாரி எம்.பி.யாக பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் சிறைத் தண்டனைக்கு எதிராக அஃப்சல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், ஜூலை 4-ஆம் தேதி தீா்ப்பை நீதிபதி சஞ்சய் குமாா் சிங் ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், அஃப்சலுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காஜிப்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமாா் சிங் திங்கள்கிழமை ரத்து செய்து தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பால், அஃப்சல் மீண்டும் எம்.பி.யாக பதவி வகிக்க முடியும்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!