Wednesday, October 2, 2024

4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள் எவை? – அரசிதழில் முழு தகவல்

by rajtamil
Published: Updated: 0 comment 10 views
A+A-
Reset

4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள் எவை? – அரசிதழில் முழு தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளிலும் இணைக்கப்படும் உள்ளாட்சிகள் எவை என்பதற்கான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆக.12-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, மாநகராட்சிகளுடன் இணையும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் தொடர்பான விவரங்கள் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி உருவாக்கப்படும் நிலையில், காரைக்குடி நகராட்சியுடன் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகள், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் (மானகிரி) ஆகிய 5 கிராம ஊராட்சிகள் இணைகின்றன.

திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்படும் நிலையில், திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், சோ.கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய 18 கிராம ஊராட்சிகள், அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதியும் இணைக்கப்படுகிறது.

அதேபோல், புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்படும் நிலையில், புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டுர் (ஒரு பகுதி), 9ஏ மற்றும் 9பி நந்தம்பண்ணை, வெள்ளனூர் (ஒரு பகுதி), திருவேங்கைவாசல் (ஒரு பகுதி), வாகவாசல், முள்ளூர் ஆகிய 11 ஊராட்சிகள் மற்றும் கஸ்பா காட்டின் மேற்கு பகுதி ஆகியவை இணைக்கப்படுகின்றன.

நாமக்கல் மாநகராட்சியில், நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி, ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024