40 சதவீத அளவுக்கு அதிகரிக்க திட்டம்; பெங்களூருவில் விரைவில் குடிநீர் கட்டணம் உயர்வு

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது காவிரி நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், பிற தேவைக்கு பயன்படுத்தும் நீர் உள்ளிட்ட அனைத்து வகையான நீர் கட்டணத்தையும் 40 சதவீதம் உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த குடிநீர் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு கர்நாடக அரசுக்கு பெங்களூரு குடிநீர் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அரசு உத்தரவிட்டதும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே பெங்களூரு நகர வளர்ச்சித் துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024