டேயிா் அல்-பாலா: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் கடந்த 48 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 96 போ் உயிரிழந்தனா்.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அந்தப் பகுதியில் திங்கள்கிழமை நிலவரப்படி இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 43,020 போ் உயிரிழந்துள்ளனா்; 1,01,110 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.
அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் ஏராளமான உடல்கள் புதையுண்டிருக்கலாம் எனவும், இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
‘100 ஹமாஸ் படையினா் கைது’
ஜெருசலேம்: காஸாவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 100 ஹமாஸ் படையினரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
காஸாவின் பியிட் லாஹியா நகரிலுள்ள கமால் அட்வன் மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 44 ஆண் மருத்துவப் பணியாளா்களைக் கைது செய்தது.
இந்த நிலையில், ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அந்த மருத்துவமனையிலிருந்து 100 ஹமாஸ் படையினரைக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.