Wednesday, October 23, 2024

58 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனைக் கைதி… மன்னிப்புக் கேட்ட காவல்துறை அதிகாரி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜப்பானில் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 58 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நபர் சில வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை தலைமை அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த ஐவா ஹகாமடா (88) முன்னாள் குத்துச் சண்டை வீரராவார். இவர், கடந்த 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஜப்பானில் உள்ள ஹமாமத்சு பகுதியில் மிசோ பீன்ஸ் பேஸ்ட் நிறுவன ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் 3 பேரையும் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் காவல்துறையும் வழக்கறிஞர்களும் ஹகாமாடாவுக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர். பல நாள்கள் தொடர்ந்த விசாரணையில் அவர் மீது வன்முறை நிகழ்த்தி ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தி தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பில் 1968 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தொடர் மேல்முறையீடு மற்றும் மறுவிசாரணை கோரிக்கை காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை.

இதையும் படிக்க | ஓராண்டில் இரட்டிப்பான பாலஸ்தீன வறுமை நிலை: 74.3%

அவருடைய, முதல் மேல் முறையீடு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நீத்கிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அவரது சகோதரியால் கடந்த 2008 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மேல்முறையீடு 2014 இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம், விசாரணையை நிலுவையில் வைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் வழக்குத் தொடர்ந்தவருக்கான மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த ஷிசுவோகா மாவட்ட நீதிமன்றம் ஹகாமடாவை நிரபராதி எனக்கூறி விடுதலை செய்தது. இதனால், கிட்டத்தட்ட 60 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

ஹகாமடா மற்றும் அவரது சகோதரி ஹிடெகோ

அவரின் விடுதலையைத் தொடர்ந்து, சிஷோகா நகரக் காவல்துறை தலைமை அதிகாரி டாகாயோஷி சூடா நேற்று (அக். 21) தனது சகோதரியுடன் வீட்டில் இருந்த ஹகாமடாவைச் சந்தித்து அவரிடம் காவல்துறை சார்பில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

”இந்த தண்டனைக் காலமான 58 வருடங்களில் உங்களுக்கும் வெளியில் சொல்லமுடியாத மன உளைச்சலையும், வலியையும் ஏற்படுத்தியதற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனக்கூறிய காவல்துறை அதிகாரி, ஹகாமடாவின் முன்னின்று வணங்கி ”முறையாக விசாரிக்காமல் தண்டனை வழங்கிய எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார். இனி வழக்குகளை சரியான முறையில் விசாரிப்பதாக உறுதியளித்தார்.

இதையும் படிக்க |அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

ஹகாமடா நீண்டகாலமாக சிறையில் இருந்ததால் அவரின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு முறையாக பேசக்கூட முடியாத நிலையில் இருந்தார். அவர் அந்த அதிகாரியிடம், “அதிகாரம் என்றால் என்ன? அதிகாரம் கையிலிருப்பதால் மட்டுமே நீங்கள் எவரையும் குற்றவாளியாகக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

ஹகாமடாவின் 91 வயதான சகோதரி ஹிடெகோ இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்திலும் அவருடைய சகோதரருக்கு துணையாக இருந்துள்ளார். தற்போது ஹகாமாடாவுடன் வசிக்கும் அவர் காவல்துறையினர் தங்களைச் சந்திக்க வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் புகார் சொல்வதில் எந்த பயனும் இல்லை. அந்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கில் ஈடுபடவில்லை. அவர் தனது கடமையை செய்ய மட்டுமே இங்கு வந்தார்”என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர் "நான் அவரது வருகையை ஏற்றுக்கொண்டேன், ஏனென்றால் மரண தண்டனைக் கைதியாக இருந்த எனது சகோதரர் அவரது கடந்த காலத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்று நான் விரும்பினேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பாலஸ்தீன குழந்தைகள் உணவின்றி தவிப்பு: இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!

ஹகாமடா, உலகில் மரண தண்டனை கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராவார். மேலும், போருக்குப் பிறகான ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான கைதிகளில் இவர் 5 ஆவது நபராவார். பெரும்பாலும், மரண தண்டனைக் கைதிகளுக்கு மறு விசாரணைகள் மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்றன.

இவரது வழக்கு மற்றும் விடுதலை, மரண தண்டனை தொடர்பான வழக்குகளில் மேலும் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும் என்றும் மறுவிசாரணைக்கான நியாயமான கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்றும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024