கடந்த 69 ஆண்டுகளில் இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 69 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
நியூசிலாந்து அணியின் இந்த தொடர் வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது. இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிக்க: யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை; டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா!
வெற்றியின் ரகசியம் பகிர்ந்த டாம் லாதம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், அவர்களது வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: நாங்கள் எங்களுக்கே உரித்தான ஸ்டைலில் விளையாடினோம். இந்திய மண்ணில் எங்களுக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தொடரில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. இரண்டு டாஸ்களுமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற வேண்டும் என நினைத்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா! அடுத்த போட்டியில் தோற்றால்?
முதல் இன்னிங்ஸில் எடுக்கப்படும் ரன்கள் மிகவும் முக்கியமானது. டாஸ் எங்களுக்கு சாதகமாக இருந்ததால், இரண்டு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டோம். கடந்த இரண்டு நாள்களாக நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளார்கள்.
மிட்செல் சாண்ட்னர் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவியது. அவர் குறிப்பிடப்படும் அளவுக்கான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவரது பந்துவீச்சு திறன் குறித்து எங்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.
இந்தியா தரமான அணி
இந்திய அணி குறித்து டாம் லாதம் பேசியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் விளையாடிய விதம் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தது. இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவது மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.
இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா தரமான அணி. ஒரு சில போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளால் அந்த அணி மோசமான அணியாக மாறிவிடாது. அவர்களது அணியில் உள்ள 15 வீரர்களுமே போட்டியை வென்றுக் கொடுக்கும் திறன் கொண்டவர்கள். சில நேரங்களில் போட்டியின் முடிவுகள் நமக்கு சாதகமானதாக இருக்காது. மும்பையில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில் அவர்கள் வலுவாக மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். நியூசிலாந்து வீரர்கள் கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க: ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட முடியாது: ரோஹித் சர்மா
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நியூசிலாந்து வீரர்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கடந்த 69 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பல்வேறு நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடருக்காக வந்து, இதுவரை 13 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளனர். ஆனால், எனது தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் சிறப்பானது என்றார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.