Friday, September 20, 2024

7 ஆண்டுகளில் 84 ஆயிரம் குழந்தைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

புதுடெல்லி,

ரெயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த 7 ஆண்டுகளில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் 84,119 குழந்தைகளை மீட்டுள்ளனர் என இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த 2018-ம் ஆண்டு ரெயில்வே பாதுகாப்பு படையினர் மொத்தம் 17,112 குழந்தைகளை மீட்டனர். இதில் 13,187 குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி வந்தவர்கள், 2,105 பேர் காணாமல் போனவர்கள், 1,091 பேர் தவறவிடப்பட்டவர்கள், 400 பேர் ஆதரவற்றவர்கள், 87 குழந்தைகள் கடத்தப்பட்டவர்கள், 78 குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 131 குழந்தைகள் சாலையோரம் வசிப்பவர்கள்.

தொடர்ந்து 2019-ம் ஆண்டு ரெயில்வே பாதுகாப்பு படையினர் 15,932 குழந்தைகளை மீட்டனர். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இயல்பான நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் 5,011 குழந்தைகளை மீட்டனர்.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு 11,907 குழந்தைகளையும், 2022-ம் ஆண்டு 17,756 குழந்தைகளையும், 2023-ம் ஆண்டு 11,794 குழந்தைகளையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். 2024-ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 4,607 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை மீட்பதோடு மட்டுமின்றி, ஓடிப்போன மற்றும் காணாமல் போன குழந்தைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ரெயில்வே பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் 135 ரெயில் நிலையங்களில் உள்ள குழந்தை உதவி மையங்கள், குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் மீட்புக்கு உதவுகின்றன. மீட்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024