சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாதாரண நாள்களிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்புகளைத் தவிா்க்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், தற்போதுள்ள நான்கு வழிச் சாலையை, பசுமை வழி விரைவுச் சாலை எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மதுரை வரையும் 8 வழிச்சாலையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள், பிற சாலை சேவைகளும் இதில் நிறைவேற்றப்படவுள்ளன.
ரூ. 26,500 கோடி செலவில் அமையவுள்ள இந்த 8 வழிச்சாலை சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலிலிருந்து தொடங்குகிறது. இதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்னா், இற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெற்று விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலை செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை – திருச்சி இடையே 310 கி.மீ. தொலைவு பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையும்.