இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா..? வாஷிங்டன் சுந்தர் பதில்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஹராரே,

ஜிம்பாப்வேவுக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், கெய்க்வாட் 49 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மயர்ஸ் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியாவின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்று ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் இடம் இந்திய அணியில் காலியாகவே இருக்கிறது. எனவே சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான நீங்கள் அவருடைய இடத்தை நிரப்புவீர்களா? என்று வாஷிங்டன் சுந்தரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு:- "நான் சிறப்பாக செயல்படும் இடங்களில் அசத்த வேண்டும். குறிப்பாக எனது தயாரிப்பில் முடிந்ததை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னுடைய 100% பங்களிப்பை இந்தியாவுக்காக கொடுக்க வேண்டும் என்பது நான் சமரசம் செய்து கொள்ளாத விஷயம். இதுவே என்னை நிகழ்காலத்தில் வைக்கிறது. அதே சமயம் என்னுடைய திறமையில் நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதற்காக நான் ஆசீர்வாதம் செய்யப்பட்டிருக்கிறேன். எனவே தொடர்ந்து என்னை நானே தயார்படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியம். அதை செய்தால் மற்ற அனைத்தும் தாமாக பார்த்துக் கொள்ளும்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024