Friday, September 20, 2024

‘அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி வழங்கும்’ – மல்லிகார்ஜுன கார்கே

by rajtamil
Published: Updated: 0 comment 27 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்கக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் பிரதமர் மோடி இந்த பிரசாரத்தில் கோவில்-மசூதி குறித்தும், பிளவுபடுத்தும் பிரச்சினைகள் குறித்தும் 421 முறை பேசியிருக்கிறார்.

கடந்த 15 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் பெயரை 232 முறை தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தனது சொந்த பெயரை கூட 758 முறை கூறியிருக்கிறார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஒரு முறை கூட அவர் பேசவில்லை. தற்போதைய மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக இருக்கும் என்ற எங்களது கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

எனவே இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, தேசியவாத அரசை இந்த கூட்டணி நாட்டுக்கு வழங்கும். மத்தியில் ஒரு மாற்று அரசு அமைய ஜூன் 4-ந்தேதி மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

'காந்தி' திரைப்படத்தை பார்த்த பிறகுதான் மகாத்மா காந்தியை பற்றி அறிந்து கொண்டதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது நகைப்புக்குரியது. ஒருவேளை அவர் காந்திஜி குறித்து படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த உலகிற்கும் மகாத்மா காந்தி குறித்து தெரியும். அவரது சிலைகள் ஐ.நா. உள்பட உலகின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு உள்ளன.

மகாத்மா காந்தியைப் பற்றி மோடிக்கு தெரியாவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் அவர் அதிகம் அறிந்திருக்க மாட்டார். எனவே மகாத்மா காந்தியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரது சுயசரிதையை மோடி ஜூன் 4-ந்தேதிக்குப்பிறகு படிக்க வேண்டும். ஏனெனில் அப்போது அவருக்கு அதிகமாக நேரம் இருக்கும்" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024