Friday, September 20, 2024

தென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

by rajtamil
Published: Updated: 0 comment 51 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரளாவில் கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. வெப்பம் உச்சத்தில் இருக்கக்கூடிய கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ததால், கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக வெப்பம் தணிந்து குளிரான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைதொடர்ந்து ஜூன் 2-ந்தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது.

பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததோடு, வரும் நாட்களில் சூறாவளி காற்று, இடி-மின்னலோடு கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், நாளை(சனிக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதேபோல் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் 24 மணிநேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும், தென் கேரளாவிலும், கனமழை பெய்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எர்ணாகுளத்தில் கடந்த 38 மணி நேரத்தில் 300 மி.மீ மழை பதிவானது. இது இந்த சீசனில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதற்கான அறிகுறி என கருதப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024