Friday, September 20, 2024

அபுதாபி சாலைக்கு இந்திய டாக்டரின் பெயர் சூட்டப்பட்டது

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அபுதாபி,

இந்தியாவில் கேரள மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் ஜார்ஜ் மேத்யூ (வயது 84). இவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் (பிரியா) என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு தனது 27-வது வயதில் முதல் முறையாக நாடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் வருகை புரிந்தார். அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரை இவர் பெற்றார்.

அதன் பிறகு அமீரகத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அவர் கடந்த 1972-வது ஆண்டில் அல் அய்ன் பகுதியின் மருத்துவ இயக்குனராக பணியாற்றினார். மருத்துவ பணியில் இவர் ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு இவரது குடும்பத்துக்கு அமீரக அரசு குடியுரிமை வழங்கியது. இதைத்தொடர்ந்து அபுதாபி விருதை கடந்த 2018-ம் ஆண்டு பெற்றார்.

அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ அளித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அபுதாபி மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் அல் மப்ரக் பகுதியில் ஷேக் ஷேக்கபுத் மருத்துவ நகரம் அருகில் உள்ள சாலைக்கு டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் மேத்யூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் அமீரகத்திற்கு வரும்போது சாலைகள் கிடையாது. சரியான மருத்துவ வசதியும் இல்லை. உள்கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்த நேரம் அது. அமீரக தந்தை ஷேக் ஜாயித் வழியில் நான் இங்குள்ள மக்களுக்கு எனது வாழ்வை அர்ப்பணித்தேன். எனது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையடைய வைத்துள்ளது.

நான் முதலில் அமெரிக்கா செல்லலாம் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அல் அய்ன் பகுதியின் அழகை கேள்விப்பட்டு இங்கு வந்தேன். இங்கு அல் அய்னின் முதல் அரசு டாக்டர் என்ற அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. ஒரு முறை அமீரக முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் முன்னிலையில் உள்ளூர் நபர் ஒருவரின் காயத்துக்கு சிகிச்சை அளித்தேன். தற்காலிக மருந்துகளுடன் நான் அளித்த சிகிச்சையில் அவர் குணமடைந்தார். அப்போது அன்றைய அதிபர் ஷேக் ஜாயித் இவர் நல்ல டாக்டர் என குறிப்பிட்டு பாராட்டினார்.

அவரது ஆதரவில் நான் இங்கிலாந்து சென்று வெப்பமண்டல நோய்கள் குறித்த படிப்பை முடித்தேன். எனது சேவைகளுக்காக அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானிடம் விருது பெற்றேன். நான் வாழும் வரை அமீரகத்திற்காகவும், அதன் குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இறைவன் எனக்கு சேவை செய்ய அதிக நேரத்தை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அமீரகத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால் 100 சதவீதம் நேர்மையுடன் பணியாற்றுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024