Saturday, September 21, 2024

ரஷியாவை சீனா இயக்குகிறது: நேட்டோ கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

நேட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, நேட்டோவுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்காவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நேட்டோவின் 32 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நேட்டோ தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். மாநாட்டின் நிறைவாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 32 பேரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்தனர். நேட்டோ தலைவர்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீன அரசின் விருப்பங்கள் மற்றும் கட்டாயக் கொள்கைகள் தொடர்ந்து நமது நலன்கள், பாதுகாப்பு மற்றும் மதிப்புகளுக்கு சவால் விடுவதாக உள்ளன. அதேபோல் ரஷியா-சீனா ஆகிய இருநாடுகளும் தங்களது உறவுகளை வலுப்படுத்துவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஒரு தீர்க்கமான உதவியாளராக இருந்து ரஷியாவை சீனா இயக்குகிறது. பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த வர்த்தகம் என்ற போர்வையில் ரஷியா போரில் ஈடுபடுவதற்கு தேவையான ராணுவ தளவாடங்களை சீனா வாரி வழங்கி வருகிறது. ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா, ஐ நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்தும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

எனவே ரஷியாவின் போர் முயற்சிகளுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு வழங்கி வரும் அனைத்து பொருள் மற்றும் அரசியல் ஆதரவை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, நேட்டோவுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024