Friday, September 20, 2024

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. காரணம் என்ன?

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

புதுடெல்லி,

1967-ம் ஆண்டின் இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவுடன் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைத்தால் அபராதம் இல்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைத்தால், ரூ.10 ஆயிரம் முதல் ரூ,50 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும். இந்த பின்னணியில், கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு குடியுரிமை பெற்று, இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதில் டெல்லிவாசிகள் முதலிடத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் 60 ஆயிரத்து 414 பேர் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். அடுத்து, பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 28 ஆயிரத்து 117 பேரும், குஜராத்தை சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 300 பேரும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து குஜராத்தை சேர்ந்தவர்கள் 1,187 பேர் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுத்து, பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறியவர்கள் ஆவர். படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், இறுதியில் அங்கேயே குடியேறி விடுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள கட்டமைப்பு வசதி, வாழ்க்கை தரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு அங்கு குடியேறுகிறார்கள். 2022-ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த 241 பேர் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர். ஒரே ஆண்டில், 2023-ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை இருமடங்காக அதாவது 485 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் மே மாதத்துக்குள் 244 பேர் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024