Tuesday, September 24, 2024

டி20 தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

டி20 தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி!ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டி20 தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி!படம் | பிசிசிஐ

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 12 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸர்பானி 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட் மற்றும் பிரண்டன் மவுட்டா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மத்வீர் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பிரையன் பென்னட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மருமணி மற்றும் தியான் மையர்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது. இருப்பினும், மருமணி 27 ரன்களிலும், தியான் மையர்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் ஃபராஸ் அக்ரம் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ஃபராஸ் அக்ரம் 13 பந்துகளில் அதிரடியாக 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி ஜிம்பாப்வேவை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4 -1 என்ற கணக்கில் நிறைவு செய்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024