Tuesday, September 24, 2024

உணர்வின் உன்னதம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

உணர்வின் உன்னதம்

வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுதான் இலக்கியம் என்னும் கொள்கை கொண்டவர் தமிழர். அதனால்தான் காதலும் அறமும் தெய்வமும் பாடுபொருளாய்க் கொண்டு இலக்கியம் படைத்தனர்.

தமிழ் இலக்கியம் மென்மையான காதலைப் பதிவு செய்கிறது. காதலின் அத்தனை பரிமாணங்களையும் அழகுறச் சொல்கிறது சங்க இலக்கியம். தமிழ் மக்கள் காதலுக்குத் தம் வாழ்வில் தந்த இடம் உன்னதமானது. தனது காதலை தெய்விகம் என்று கொண்டாடியது மட்டுமல்ல ஒவ்வொரு உயிரின் காதலும் மகத்துவம் மிக்கது என்ற நம்பிக்கையும் நாகரிகமும் தமிழர் மனதில் இருந்தது.

வேற்று நாட்டவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க முனைந்த கபிலரின் "குறிஞ்சிப்பாட்டு' நம் அறம் சார்ந்த அழகிய காதலையே சொல்கிறது.

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில்

பெருந்தகை

நின்னோடு உண்டலும் புரைவது என்று

ஆங்கு,

அறம் புணை ஆகத் தேற்றிப், பிறங்கு

மலை

மீமிசைக் கடவுள் வாழ்த்திக்

கைதொழுது,

ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி

(குறிஞ்சிப்பாட்டு 206 -210)

எனத் தலைவன் தலைவிக்கு வாக்களிக்கின்றான். விருந்தோம்பல் செய்யும் உயரிய அறத்தை உன்னோடு கூடி இல்லறத்தில் மேற்கொள்வேன் என்றே தெய்வத்தை வணங்கி, தெய்வ சாட்சியாக சத்தியம் செய்து காதலை வெளிப்படுத்துகிறான். தனது காதலில் கண்ணியம் காட்டிய தமிழனின் மனம் இதோடு நிற்கவில்லை. சக உயிர்கள் எல்லாவற்றின் காதலையும் பெருமதிப்புடன் அங்கீகரிக்கிறது.

அகநானுறு மற்றுமொரு தலைவனை நமக்குக் காட்டுகிறது.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(அகம் 4: 10-12)

பணி நிமித்தமாய்ப் பிரிந்து சென்ற தலைவன் தலைவியைக் காணக் காதல் பொங்கும் மனதோடு விரைந்து வரும் வேளையில் வழியில் வண்டுகள் தன் துணையோடு கூடிக் களிப்பதைக் காண்கின்றான், அவற்றின் காதலுக்குத் தொந்தரவாகத் தேரின் மணியோசை இருக்கக் கூடாதென மணிகளைக் கட்டி ஓசை ஏற்படாத வகையில் தேரினைச் செலுத்துகிறான்.

"மணிநா ஆர்த்த மாண்வினை தேரன்' என்று குறுங்குடி மருதனார் இந்தத் தலைவனைக் கொண்டாடுகிறார். இங்கே தன் துணையைத் தேடிச் செல்லும் தலைவன் அந்தக் காதல் மனநிலையில் மற்றோர் உயிரின் காதலைப் போற்றுகிறான்.

ஆனால், மிக வினோதமான காட்சி ஒன்றை மற்றோர் இடத்தில் காண்கின்றோம். போருக்கு இலக்கணம் சொல்லும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை. அதிலே ஒரு போர்க்களம் காட்டப்படுகிறது.

பகைவர் நாட்டின் மீது படைகொண்டு அவர்களது எல்லைக்குள் புகுந்து அங்கு காவல் இருந்த மறவர்களை வீழ்த்திப் பசுக்கூட்டங்களையும் கன்றுகளையும் கவர்ந்து கொண்டு திரும்புகிறான் போர்வீரன். பெரும் காட்டின் வழியாக வருகின்றான். அவன் கொண்டு வந்த பசுக்களும் காளைகளும் காட்டின் பசுமையானபுற்களை மேய்ந்துகொண்டும் தம்முள்கூடி சுகம் துய்த்துக் கொண்டும் இருக்கும் பொழுது, வெள்ளம் போலப் பகைவர் படை வருகிறது. அந்தக் களத்திலும், பகைவரோடு போரிடும் வேளையிலும், கூடிக் களித்திருக்கும் அந்தப் பசுக்களுக்கு எந்த இடையூறுமின்றி அழைத்துச் செல்லுங்கள் எனத் தன் ஏவலாளர்களுக்குக் கட்டளையிட்டு அவன் வில் ஏந்தியவனாய் எதிரிகளோடு போராட முன்னேறுகிறான்.

புன்மேய்ந்து அசைஇப் புணர்ந்துடன்

செல்கென்னும்

வில்மேல் அசைஇயகை

வெல்கழலான் – தன்மேற்

கடுவரை நீரிற்கடுத்து வரக்கண்டும்

நெடுவரை நீழல் நிரை.

(புறப்பொருள் வெண்பாமாலை 1.11)

போர்க்களத்திடையே காணும் இந்தக் காட்சி, நம் முன்னோர் காதலை உயிரின் இயல்பெனப் போற்றியமை, உணர்வின் உன்னதத்தை உணர்ந்து சக உயிர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தமை இவற்றைக் காட்டி நிற்கும் காலக்கண்ணாடி.

You may also like

© RajTamil Network – 2024