டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதிலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024