Tuesday, September 24, 2024

சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கித்தவித்த நோயாளி – மயங்கிய நிலையில் மீட்பு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். இவர் அப்பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆவார்.

இவர் கடந்த சனிக்கிழமை காலை முதுகு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மருத்துவரை சந்தித்த ரவீந்திரன் தனது சில மருத்துவ ஆவணங்களை எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மதிய வேளையில் மருத்துவமனைக்கு திரும்பிய ரவீந்திரன், தரை தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் லிப்ட் திடீரென பலமாக குலுங்கி பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இந்த சம்பவத்தின் போது ரவீந்திரனின் செல்போன் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து அவர் லிப்டில் இருந்த அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார். ஆனால் அலாரம் வேலை செய்யவில்லை. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் லிப்டை உபயோகிக்க முயற்சித்தபோது அது பழுதடைந்தது தெரியவந்ததையடுத்து அதை யாரும் பயன்படுத்தவில்லை.

வெகுநேரமாக மருத்துவமனைக்கு சென்ற ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனையின் லிப்டில் அவர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் லிப்ட் ஆபரேட்டரை வரவழைந்து லிப்டை திறந்து பார்த்தபோது, ரவீந்திரன் களைத்துப்போய் தரையில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்தனர். கடந்த 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் ரவீந்திரன் லிப்டில் சிக்கியிருந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளிக்குமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவர் லிப்டில் சிக்கி 2 நாட்கள் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024