Tuesday, September 24, 2024

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் குறித்து அவதூறு: யூடியூபர் மீது வழக்குப் பதிவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அகன்ஷா பிர்லா, பட்டய கணக்காளராக (சிஏ) பணியாற்றி வருகிறார். இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அவர் குடிமைத் பணித் தேர்வை எழுதினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அஞ்சலி பிர்லா தேர்ச்சி பெற்றார். தற்போது அவர் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். முதல் முயற்சியிலேயே குடிமைப் பணித் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது.பிரபல யூடியூபர் துருவ் ராட்டி தனது சமூக வலைதள பக்கங்களில், அஞ்சலி பிர்லா குறித்த பதிவுகளை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து மும்பை போலீஸார் கூறும்போது, "ஓம் பிர்லாவின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் யூடியூபர் துருவ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளோம். அவர் மீது சட்டரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும்'' என்றனர். இதுகுறித்து துருவ் ராட்டி கூறும்போது, "மும்பை சைபர்கிரைம் போலீஸாரின் அறிவுறுத்தலின்படி அஞ்சலி பிர்லா தொடர்பான அனைத்து பதிவுகளையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டேன். அந்த பதிவுகள் எனது சொந்த கருத்துகள் கிடையாது. பிறருடைய பதிவுகளை நான் எனது சமூக வலைதள பக்கத்தில் பகிர மட்டுமே செய்தேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன்'' என்று தெரிவித்தார்.

ஹரியாணாவை பூர்விகமாகக் கொண்ட துருவ் ராட்டி தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். அவரது யூ டியூப் சேனல்களில் 2.87 கோடி பின்தொடர்வோர் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவர் வெளியிட்ட வீடியோக்கள் இந்திய அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024