மின் கட்டண உயர்வு: மக்களை வாட்டி வதைப்பதே அரசின் வாடிக்கையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி

by rajtamil
0 comment 42 views
A+A-
Reset

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு?

"சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024